தோல்வியைத் தோற்கடித்தவர் - ஜாக் மா
சீனாவிலுள்ள ஹாங்சௌ என்கிற நகரில் 1964 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 10 ஆம் தேதி பிறந்தார் ஜாக் மா. இவருடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். இவருடைய குடும்பத்தில் இவரையும் சேர்த்து மொத்தம் மூன்று குழந்தைகள். இவர் இரண்டாவது குழந்தை. இவருக்கு ஓர் அண்ணன் மற்றும் ஒரு தங்கை.
சுட்டுப்போட்டாலும் படிப்பே வராது என்ற நிலையில்தான் இவருடைய பள்ளிப் படிப்பு சென்றது. ஆரம்பப்பள்ளித் தேர்வில் இரு முறை தோற்றுப்போனவர். நடுநிலைப்பள்ளி தேர்வில் மூன்று முறை தோல்வி அடைந்தவர். கல்லூரி நுழைவுத்தேர்வில் இரு முறை தோல்வி அடைந்தவர். இப்படித்தான் இவருடைய கல்விப் பயணம் அமைந்திருந்தது. கல்லூரி நுழைவுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் 120 க்கு இவர் வாங்கிய மொத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு மதிப்பெண் மட்டும்தான்.
படிப்பு இப்படி என்றால் ஆள் பார்க்க எப்படி இருப்பார் தெரியுமா? ஒல்லியாகவும், குள்ளமாகவும், மிகவும் பலவீனமான ஒரு தோற்றமுடையவராகவே ஜாக் மா இருந்தார். இவருடைய உருவ அமைப்பே பார்ப்போரின் நகைப்பிற்கும் பரிகாசத்திற்கும் இவரை உள்ளாக்கியது. ஒவ்வொருவருக்குள்ளும் சிறப்பான ஒரு திறமை கண்டிப்பாக இருக்கும். ஜாக் மாவுக்கும் அது விதிவிலக்கல்ல. சிறு வயதிலிருந்தே ஜாக் மாவுக்கு ஆங்கிலம் கற்பதில் அலாதியான ஆர்வம் இருந்தது.
இவருக்கு எட்டு வயது இருக்கும். அப்போது அவர் வாழ்ந்த நகருக்கு சுற்றுலாப்பயணிகளின் வரவு அதிகரித்த காலம் அது. அப்போது கட்டணமில்லா சுற்றுலா வழிகாட்டியாக ஜாக் மாறினார். அதில் ஆங்கிலத்தை அதிகமாக கற்றுக் கொண்டார். இப்படியே காலம் கடந்தது.
தன்னுடைய பட்டபடிப்புக்காக ஹார்வர்ட் பல்கலைக் கழகத்திற்கு விண்ணபித்தார். பல்கலைக்கழக நிர்வாகம் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தது. மீண்டும் விண்ணபித்தார். மீண்டும் இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அப்படியாக இவர் பத்து முறை ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தால் நிராகரிக்கப்பட்டார். பின்னொரு நாளில் இது குறித்து அவர் பேட்டியளிக்கும் போது, ‘இன்று எந்த பல்கலைக் கழகத்தால் நிராகரிப்பட்டேனோ அதே பல்கலைக்கழகத்தில் நிச்சயம் ஒரு நாள் சிறப்புரை ஆற்றும் அளவிற்கு உயர்ந்து காட்டுவேன் என்று எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன்.’ என்று கூறினார். அதன்பின் வேறு வழியில்லாமல் 1980 ஆம் ஆண்டில் தன்னுடைய நகரிலேயே இருக்கும் நார்மல் என்கிற பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். 3 வருட பட்டப்பிடிப்புக்கு பின்பு வேலை தேட ஆரம்பித்தார்.
காவல் துறையில் பணிக்கு சேர இவரோடு சேர்த்து மொத்தம் 5 பேர் விண்ணப்பித்தார்கள். இவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். கே.எப்.சி என்கிற புகழ்பெற்ற உணவு நிறுவனத்தின் மேலாளர் பணிக்காக இவரோட சேர்த்து மொத்தம் 24 பேர் விண்ணப்பித்தார்கள். அதிலும் இவர் மட்டுமே நிராகரிக்கப்பட்டார். இன்னொரு முறை இவரும் இவருடைய உறவினர் ஒருவரும் ஓர் உணவு விடுதியில் சர்வர் வேலை தேடிப் போனார்கள். இவருடைய உறவினருக்கு அந்த வேலை கிடைத்தது. அங்கேயும் ஜாக் நிராகரிக்கப்பட்டார். விரக்தியடைந்த ஜாக் ‘எனக்கு ஏன் இந்த வேலையைத் தரவில்லை?’ எனக் கேட்ட போது, உணவு விடுதியின் உரிமையாளர் ‘உன்னுடைய இந்த உருவத்தை எல்லாம் வாடிக்கையாளர்கள் முன்பு நிறுத்த முடியுமா? கேள்வி கேட்காமல் இடத்தை காலி செய்’ என்று விரட்டினார். இப்படியாக ஏறக்குறைய 30 வேலைகளுக்கு விண்ணப்பித்து எல்லாவற்றிலும் நிராகரிப்பை மட்டுமே சந்தித்தார்.
இக்காலகட்டத்தில் ஜாக் படித்த கல்லூரியில் பகுதி நேர ஆங்கில விரிவுரையாளருக்கான வேலை காலியாக இருந்தது. அது ஜாக் மாவுக்கு கொடுக்கப்பட்டது. ஊதியம் குறைவாக இருந்தாலும் இனியும் வெளியில் வேலை தேடி இன்னும் அவமானப்படுவதைவிட கிடைத்த இவ்வேலையைச் செய்யலாம் என செய்து வந்தார். சீனர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. மேற்கத்திய நாடுகளோடு வணிகத் தொடர்பு வைக்க விரும்பிய சீன அரசுக்கு ஆங்கிலம் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள் தேவைப்பட்டார்கள். அதைத் தனக்கு சாதகமாக்கிய ஜாக் மா அதில் தன்னையும் மொழிபெயர்ப்பாளராக இணைத்துக் கொண்டார்.
1995 இல் முதன்முறையாக அமெரிக்காவுக்கு மொழிபெயர்ப்பாளராக ஜாக் மா சென்றிருந்த போது இணையம் இவருக்கு அறிமுகமானது. இனிவரும் நாட்களில் இணையம்தான் உலகின் எல்லா தளங்களிலும் வியாபித்திருக்கும் என்கிற எண்ணம் அப்போதே இவர் மனதிற்குள் உதயமானது.
சீனா பேஜ் என்கிற ஆன்லைன் விற்பனை நிறுவனத்தை தொடங்கிய ஜாக் மா குறிப்பிட்ட காலத்தில் அதையும் மூட வேண்டியிருந்தது. பின்பு 1999 இல் தன்னுடைய மனைவி மற்றும் சீனாபேஜ் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து அலிபாபா என்கிற நிறுவனத்தை தொடங்கினார். அதிலும் தொடக்கத்தில் எவரும் முதலீடு செய்ய முனவராத காரணத்தால் முடக்கத்தையே ஜாக் மா சந்திக்க வேண்டியிருந்தது. காலம் செல்லச் செல்ல ஜாக் மாவின் உழைப்பும் உறுதியும் அவருக்கு வெற்றியைக் கொண்டுவந்தது. இரு முன்னணி நிறுவனங்கள் அலிபாபா நிறுவனத்தில் முதலீடு செய்ய சம்மதித்தனர். ஜாக் மா தன்னுடைய கடின உழைப்பால் வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். அலிபாபா நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முன்னால் ஈடுகொடுக்க முடியாமல் ஈபே என்ற பெரிய நிறுவனம் இருந்த இடம் தெரியாமல் சீனாவில் இருந்து ஓடிப்போனது.
2017 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் இதழின் பணக்காரர்கள் பட்டியலில்படி ஜாக் மா சீனாவின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆவார். உலகின் ஆன்லைன் வர்த்தகத்தையே தன்னுடைய உள்ளங்கைக்குள் வைத்துள்ள நிறுவனமாக அலிபாபா நிறுவனம் இன்று அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் இந்த மாபெரும் வெற்றிக்குப் பின்னால் ஜாக் மா என்கிற குள்ள மனிதனின் தோல்விகளும் அவமானங்களும் அதிகமாய் உள்ளன.