Thursday, 3 September 2020

கதையை வாசிங்க ... கருத்தை யோசிங்க... (5)

 கத்தரிக்கோலும் தையல் ஊசியும்




அந்த ஊர் முழுவதும்

அந்த தையல்காரன் ரொம்ப பிரபலம்.

நேர்த்தியோடும் நேரத்தோடும்

ஆடைகளைத் தைத்துத் தருவதில்

அவனை அடித்துக்கொள்ள ஆளில்லை.


அவனைப் பற்றிக் கேள்விப்பட்டான் அந்நாட்டு மன்னன்.

அத்தையல்காரனை தனக்கொரு ஆடை தைத்துத் தரச்சொன்னான்.

அழகான பட்டாடையை அருமையாகத் தைத்து

அரசனுக்குக் கொடுத்தான் தையல்காரன்.

அந்த பட்டாடையை அணிந்த அரசன்

அதில் மிகவே பரவசமடைந்தான்.

அழகிய வேலைப்பாடுடைய ஒரு கத்தரிக்கோலையும்

அதனோடு ஒரு சிறிய தையல் ஊசியையும்

அன்புப் பரிசாக தையல்காரனுக்கு கொடுத்தான்.


சில வாரங்களுக்குப் பிறகு

ஒரு நாள் தனது தையல் கடையில்

ஓர் ஆடை தைக்கும் வேலையில்

மூழ்கியிருந்தான் தையல்காரன். 

துணியை எடுத்து மேசையில் விரித்தான்.


அரசன் தந்த அழகான கத்தரியை கையில் எடுத்து

ஆங்காங்கே தேவைப்பட்ட இடத்தில் வெட்டிக்கொண்டான்.

துணிகளை வெட்டி முடித்த பிறகு

கத்தரிக்கோலை தன் காலடியில் தூக்கிப்போட்டான்.


தன் தலைப்பாகையில் காதுக்கு பக்கத்தில் குத்திவைத்திருந்த

தையல் ஊசியை எடுத்து தைக்கத் தொடங்கினான். 

தையல் முடிந்ததும் மீண்டும் தையல் ஊசியை 

தலைப்பாகையின் காதருகே குத்திவைத்துக்கொண்டான்.


இப்போது கத்தரிக்கோலும் தையல் ஊசியும் பேசத்தொடங்கின.

‘என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இந்த தையல்காரன்?

என் மதிப்பு தெரியுமா இவனுக்கு?

நான் எவ்வளவு அழகு?

என்னை அரசனே இவனுக்கு அன்பளிப்பாய் கொடுத்தான்.

ஆனால் ஒன்றும் தெரியாத இவன் 

என்னை காலடியில் தூக்கி வீசியிருக்கிறான்.

ஆனால் என்னைவிட மதிப்பு குறைந்த 

உன்னையோ காதுக்கு பக்கத்தில் குத்திவைத்திருக்கிறான்

இந்த விவரம் கெட்ட தையல்காரன்.’

என்று வார்த்தைகளில் சூடு பறக்க 

தன் கோபத்தை கொப்பளித்தது கத்தரிக்கோல்.


பொறுமையாக கேட்ட தையல் ஊசி

பொறுப்புடன் தன் பேச்சைத் தொடங்கியது.

‘உருவத்தில் உன்னைவிட குறைவுதான் நான்.

அழகில் உன்னைவிட குறைவுதான் நான்.

விலையிலும் உன்னைவிட குறைவுதான் நான்.

ஆனால் செய்யும் பணியில் உன்னைவிட நான் குறைவில்லை தெரியுமா?

சொல்லப்போனால் என்னுடைய பணி பாராட்டுக்குரிய பணி.

நீயோ துணிகளை வெட்டி வெட்டி வீசுகிறாய்.

நானோ வெட்டப்பட்ட துணிகளை சேர்த்து தைக்கிறேன்.

பிரிப்பது நீ. சேர்ப்பது நான்.

தனித்திருக்க வைப்பது நீ. இணைந்திருக்க வைப்பது நான்.

வெட்டியதில் அழகில்லை. வெட்டியதை ஒட்டுவதில்தான் அழகு இருக்கிறது.

இப்போது புரிந்துகொள்.

பிரித்து வைப்பவர்களுக்கு தரையில் இடம்.

சேர்த்து வைப்பவர்களுக்கு தலையில் இடம்.’