அரச மரமும் அருகம் புல்லும்
அழகான காடு அது.
அங்கே இருந்தது, அரச மரம் ஒன்று.
அதற்கு கீழே அருகம்புல் ஒன்றும் முளைத்து வளர்ந்திருந்தது.
அரச மரம் அருகம்புல்லை ஏளனமாகப் பார்த்து
எகத்தாளமாய்ச் சொன்னது:
‘ஏ, அற்பமான அருகம்புல்லே,
என்னைப் பார்த்தாயா?
எவ்வளவு பிரமாண்டமாய் நான் இருக்கிறேன்.
எனக்கோ பரந்து விரிந்த கிளைகள்
உனக்கோ சுருங்கிப்போன சிறிய ஊசி இலைகள்.
எனக்கோ பலம் நிறைந்த தோரணை,
உனக்கோ பலவீனமான தோற்றம்.
நான் அழகிய வதனம்.
நீ அசிங்கமான உருவம்.
எல்லாம் இருக்கும் நான் எங்கே,
எதுவும் இல்லாத நீ எங்கே.
எனது நிழலில் நீ இருக்க
உனக்கு வெட்கமாக இல்லையா?’
அனைத்தையும் கேட்ட அருகம்புல்லுக்கு
அடக்க முடியாத அழுகை வந்தது.
பெருமையென்று எனக்கு சொல்லிக்கொள்ள
பெரிதாக இல்லை எதுவுமே என்று
பேசாமல் அமைதியாய் இருந்தது.
இப்படியே நாட்களும் நகர்ந்தன.
இறுதியாய் ஒரு நாள் இரவு
புயல் காற்று ஒன்று
பலமாக வீசியது.
காற்றின் போக்குக்கு தாக்குபிடிக்க முடியாமல்
காட்டில் பல மரங்கள் மண்ணில் சரிந்தன.
அதில் ஆணவக்கார அரச மரமும் அடங்கும்.
மண்ணில் சாய்ந்து போய்
மடியும் நிலையிலிருந்த அரச மரம்
மலர்ந்த முகமாய் மண்மீது நின்ற அருகம்புல்லிடம் கேட்டது:
‘ஏ, அருகம்புல்லே!
எப்படி இது சாத்தியம்?
வலியவன் நான் சாய்ந்துவிட்டேன்.
எளியவன் நீ சாயவில்லையே?
பலமான என்னால் கூட
புயலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை
பலமற்ற உன்னால் மட்டும்
புயலுக்கு ஈடுகொடுக்க முடிந்ததெப்படி?’
ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி
அருகம்புல் பேசியது:
‘அன்பான அரசமரமே!
இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
புயல் கடுமையாய் வீசியபோது
நீங்கள் உங்கள் தலையை நிமிர்த்தி நின்றீர்கள்,
நானோ என் தலையை தாழ்த்தி நின்றேன்.
உங்கள் திமிர் உங்களை சாய்த்தது.
என் தாழ்ச்சி என்னை காத்தது.
திமிர் சாய்க்கும்.
தாழ்ச்சி சாதிக்கும்.
நீங்கள் சாய்ந்ததும்
நான் சாதித்ததும் இப்படியே.’