65 வயது அறிவழகனின் 130 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்
தஞ்சாவூர் மாவட்டத்தில்
கும்பகோணம் அருகிலுள்ள ஒரு சிறு கிராமம்.
65 வயதான கணவர் அறிவழகன்.
60 வயதான அவருடைய மனைவி மஞ்சுளா.
ஏழைக் குடும்பம். மனைவிக்கு புற்றுநோய்.
கொரோனாவுக்காக 144 தடை உத்தரவு போடப்பட்டது.
ஆனால் மனைவிக்கு மார்ச் 31 ஆம் தேதி 3வது கீமோ சிகிச்சை.
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு போக வேண்டும்.
போக்குவரத்து வசதிகள் ஒன்றுமே இல்லை.
கை பிடித்த கணவன் கை கட்டி வேடிக்கை பார்க்கவில்லை.
எப்படியாவது மனைவியை சிகிச்சைக்கு அழைத்துப்போக
அறிவழகனுக்கு ஆசை.
உறவுகள் உற்சாகப்படுத்தவில்லை.
மார்ச் 30 காலை 4.45 மணிக்கு தன்னுடைய சைக்கிளை எடுத்தார்.
பின்னால் மனைவியை ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.
வழியில் காவலர்கள் நிறுத்திய போதெல்லாம்
தன்னுடைய மனைவியின் மருத்துவ குறிப்பைக் காட்டினார்.
அவர்கள் இருவருக்கும் உணவு கொடுத்து அனுப்பி வைத்தனர்.
இரவு 10.15 மணிக்கு மருத்துவமனையை அடைந்தனர்.
புற நோயாளிகளை அனுமதிக்காமல் இருந்தாலும்
மருத்துவமனையின் அதிகாரிகள்
இவர்கள் நீண்ட தூரத்தில் இருந்து வந்திருப்பதால்
மஞ்சுளாவுக்கு கீமோ சிகிச்சை செய்து
மறுநாள் ஆம்புலன்ஸ் ஒன்றில்
அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தள்ளாடும் வயதிலும் தன் அன்பு மனைவியை
கால் வலிக்க சைக்கிளில் வைத்து மிதித்து
சுமார் 130 கிலோ மீட்டர் போனவரின் பயணம்
உண்மையில் நமக்கெல்லாம் உறவின் மாண்பைச் சொல்லும்
ஓர் உன்னதப் பாடம்.
மனைவியை மிதிப்பவர்களுக்கு மத்தியில்
மனைவிக்காக சைக்கிள் மிதித்த
அறிவழகன் ஓர் அழகான ஓவியம் தான்!!!