எவரெஸ்ட்டை எட்டிப்பிடித்த எட்மண்ட் ஹிலாரி
நியூசிலாந்து நாட்டிலுள்ள ஆக்லாண்ட் என்னும் இடத்தில் 1919 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 20 ஆம் தேதி பிறந்தார் எட்மண்ட் ஹிலாரி. ‘ஹில்’லாரி (ஹில் - மலை) என்பதை தன்னுடைய பெயரில் வைத்திருப்பதாலோ என்னவோ எட்மண்ட் ஹிலாரிக்கு மலையேறுவதில் கொள்ளை விருப்பம். ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் மலைத்தொடர், நியூசிலாந்திலுள்ள மலைகள் என்று இவர் தன்னுடைய கால்களால் அளவிட்ட மலைகள் பல உண்டு.
மலையேறும் வீரராக இருந்த ஹிலாரி, தன்னுடைய வாழ்க்கையில் கொண்டிருந்த மாபெரும் கனவும், இலட்சியமும் எது என்றால் உலகத்தின் மிக உயரமான சிகரம் என்கிற பெருமைக்குரிய இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தைத் தொடுவதாகும். அதுவரை எவரெஸ்ட் சிகரத்தை எவரும் தொட்டதில்லை என்பது, இவருடைய கனவை இன்னும் பற்றி எரியச் செய்தது. மலையேற்றத்தில் பல்வேறு சாதனைகளையும் வெற்றிகளையும் அதுவரை பெற்றிருந்த எட்மண்ட் ஹிலாரிக்கு, எவரெஸ்ட்டின் உச்சியில் தன்னுடைய காலடித் தடத்தை எப்படியாயினும் பதித்துவிட வேண்டும் என்பது இதயத்துடிப்பாகவே மாறிப்போயிருந்தது.
‘எட்டிவிடும் தூரத்தில் எவரெஸ்ட்டும் இல்லை. அதை விட்டுவிடும் நிலையில் நானும் இல்லை’ என்பதை எட்மண்ட் ஹிலாரியின் கடினமான பயிற்சியும் கைவிடாத முயற்சியும் தொடர்ந்து எண்பித்துக்கொண்டே இருந்தன. ‘ஹை அட்வெஞ்சர்’ (High Adventure) என்னும் தன்னுடைய நூலில் பின்னாளில் இது குறித்து அவர் விரிவாகவே பதிவு செய்திருக்கிறார்.
முதல் முறை அவர் தன்னுடைய கனவுக்கு சிறகு கொடுத்து இமயமலையின் உச்சிக்கு ஏறத்தொடங்கியது 1952 ஆம் ஆண்டு. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும்தான் மலையேறும் குழுவுக்கு அப்போது அனுமதி வழங்கப்பட்டது. அப்போது சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு மலையேற்றக் குழுவுடன் இணைந்து 1952 இல் முதன் முறையாக எவரெஸ்ட் நோக்கிய தன் சாகசப் பயணத்தைத் தொடங்கினார் ஹிலாரி. அச்சமயத்தில் அதே குழுவில் இடம்பெற்றிருந்த இன்னொருவர் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நார்கே என்பவர். சாதாரண கற்பாறைகளால் ஆன மலையில் ஏறுவதே மிகக் கடினம். பனிப்பாறைகளால் உருவான மலையில் ஏறுவது இன்னும் எவ்வளவு கடினமாக இருக்கும் என்பது நமக்கு நன்றாகவே புரிகிறது. பனிபோர்த்திய இமயமலையின் பரப்பில் ஹிலாரியின் இலட்சியக் காலடித்தடம் ஒவ்வொன்றாய் படியத் தொடங்கியது.
இந்த முதல் பயணத்தில் முழுமூச்சாய் ஏறிய ஹிலாரிக்கு இயற்கை சாதகமாக அமையவில்லை. சுற்றுச் சூழலும் தட்பவெட்பநிலையும் மிகவும் மோசமாக இருந்ததால், தொடர்ந்து மலையேறுவது அக்குழுவில் எவருக்கும் சாத்தியப்படவில்லை. கனவுகளை நெஞ்சில் சுமந்து, தன் காலடித்தடத்தால் காலமும் நிலைக்கும் காவிய வரலாறு படைக்க நினைத்த ஹிலாரிக்கு இது பேரிடியாக இருந்தது. எத்தனையோ எதிர்பார்ப்புகளோடு பயணத்தில் வந்த சவால்களை சமாளித்து முன்னோக்கி மேலே ஏறிச்சென்ற ஹிலாரி பெருத்த ஏமாற்றத்தோடு கீழே இறங்கி வந்தார். ஏறக்குறைய முக்கால்வாசி தொலைவை எட்டியும் இப்படி உச்சியைத் தொடாமல் திரும்பியது அவருடைய கனவுக்கோட்டையில் விழுந்த கல்லடியாக மாறிப்போனது.

இந்நிகழ்வுக்குப் பின்பு இங்கிலாந்து நாட்டிலுள்ள ஓர் அமைப்பினர் தங்கள் உறுப்பினர்களிடம் உரையாற்ற ஹிலாரிக்கு அழைப்பு கொடுத்தனர். தோல்வியால் துவண்டு போயிருந்த ஹிலாரி முதலில் இங்கிலாந்துக்கு வர மறுத்தார். வெற்றியோடு மேடையேறுவது என்பது ஒரு வரம். ஆனால் தோல்வியோடு மேடை ஏறுவது என்பது ஒரு வலி. அந்த வலி ஹிலாரிக்கு அதிகமாகவே இருந்திருக்க வேண்டும். தோற்றுப்போன ஒருவனாக மேடையில் ஏறி மக்களைச் சந்திப்பது என்பது அவருக்கு வருத்தமளிக்கும் ஒன்றாக இருந்தது. ஆனால் ஹிலாரி எவ்வளவு மறுத்தாலும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி அழைக்கப்பட்ட காரணத்தால் இங்கிலாந்துக்குச் சென்றார்.
இந்த சிறப்பு நிகழ்வில் ஹிலாரி மேடையேறும் நேரம் வந்தது. அவருடைய பெயரை அறிவிப்பாளர் சொல்லி மேடைக்கு பேச வரும்படி அழைத்தார். அப்போது அரங்கம் முழுவதும் ஆரவாரமான கைதட்டலால் நிறைந்தது. இது ஹிலாரிக்கு உண்மையில் பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது. இதுவரை தன்னை தோற்றுப்போனவன் என்று எண்ணிக் கொண்டிருந்த ஹிலாரி இடியோசையை விஞ்சும் இந்த அரங்கத்திலுள்ள அனைவரின் கைதட்டலால் ஆனந்த கண்ணீர் சிந்தினார். மனதிற்குள் மறுபடியும் கனவுக் கோட்டை உயர்ந்து ஜொலித்தது. முதலில் அவரால் பேச முடியாத அளவிற்கு திக்குமுக்காடிப் போனார்.
மேடையில் நடுவே சென்று அங்கு மேடையின் பின்னணி ஓவியமாக வைக்கப்பட்டிருந்த இமயமலையின் ஓவியத்திலிருந்த எவரெஸ்ட்டைத் தன்னுடைய கையால் தொட்டு அவர் கூறிய வார்த்தைகள் எவை தெரியுமா?
“ஏ! எவரெஸ்ட் சிகரமே, முதன் முறை உன் உச்சியைத் தொட்டுவிட வந்த என்னை நீ தோற்கடித்துவிட்டாய். ஆனால் அடுத்த முறை நிச்சயம் நான் உன்னைத் தோற்கடித்துவிடுவேன். ஏனென்றால் நீ எப்படி வளர்ந்திருக்கிறாயோ அதே போல நானும் வளர்ந்துகொண்டிருக்கிறேன். உன் வளர்ச்சி முடிந்து விட்டது. என் வளர்ச்சி இன்னும் இருக்கிறது.”
அதன் பிறகு முயற்சியும் பயிற்சியும் இன்னும் கடினமாக இருக்கும்படி ஹிலாரி பார்த்துக்கொண்டார். அடுத்த ஆண்டே அதாவது 1953 இல் மீண்டும் மலையேற்றத்திற்கு அனுமதி கிடைத்தது. இந்த முறையும் எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நார்கேயும் இணைந்து மலையேறத் தொடங்கினர்.
1953 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் தேதி வானளாவிய வரலாறு ஒன்று படைக்கப்பட்டது. வரலாற்றின் வசம் தன்னை விட்டுவிடாமல், வரலாற்றைத் தன்வசப்படுத்தியவர் எட்மண்ட் ஹிலாரி. ஆம். எவரெஸ்ட்டை எட்டிப்பிடித்த எட்மண்ட் ஹிலாரி என்று உலகம் இவரைப் போற்றியது. எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் இருவர் என்கிற பெருமை எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்வே ஆகிய இவர்களுக்கே உரித்தானது.
தன்னை நெருங்க முடியாதபடி எந்த எவரெஸ்ட் சிகரம் எட்மண்ட் ஹிலாரியைக் கீழே தள்ளிவிட்டதோ, அதே எவரெஸ்ட் சிகரத்தை தான் எட்டிப்பிடித்ததோடு அல்லாமல் தன் காலடியால் அதன் உச்சியை அளந்தும்விட்டார் ஹிலாரி. எட்ட முடியாததை எட்டிப்பிடிக்க உன் உழைப்பையே ஏணியாக்கு. அதில் ஏறுவதற்கு விடா முயற்சியையும் தொடர் பயிற்சியையும் உன் இரு கால்களாக்கு. இதுவே ஹிலாரியின் எவரெஸ்ட்டை எட்டிய சாதனை நமக்குச் சொல்லும் பாடமாகும்.
இவர் இரண்டாம் உலகப்போரின் போது நியூசிலாந்து விமானப் படையில் பணியாற்றி உள்ளார். ஹிலாரியின் மகன் பீட்டர் ஹிலாரி என்பவரும் 1990 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டவர் என்பது இன்னும் கூடுதல் ஆச்சரியம் தருகிறது. 1992 ஆம் ஆண்டில் ஹிலாரியினுடைய உருவம் பதித்த புதிய 5 டாலர் நோட்டை நியூசிலாந்து அரசு வெளியிட்டது. தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய உருவம் பதித்த டாலர் நோட்டைப் பார்க்கும் பாக்கியம் பெற்ற நியூசிலாந்தைச் சேர்ந்த முதல் மனிதரும் இவரே. தனது 88 ஆவது வயதில் அதாவது 2008 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் ஹிலாரி தன் மண்ணக வாழ்வைத் துறந்தார். ஹிலாரியின் இறப்பிற்குப் பின்பு இந்திய அரசு அவருக்கு பத்ம விபூசன் விருது வழங்கி கௌரவித்தது.