Friday, 14 August 2020

சுதந்திர திருநாள்

சுதந்திரம் - மந்திரமா? தந்திரமா?



மகான்கள் வாங்கித் தந்த சுதந்திரம்

மயானமாய் நாடு மாறுவதற்கா?

மண்ணின் மாண்பு பெற்ற சுதந்திரம்

மண்ணை விற்றுத் தீர்ப்பதற்கா?


மன்னர்களின் வீரத்தால் விளைந்த சுதந்திரம்

மனிதர்களை விறகாய் எரிப்பதற்கா?

பெண்களின் எழுச்சியால் பிறந்த சுதந்திரம்

பெண்ணைச் சிதைத்து சிறுமைப்படுத்துவதற்கா?


காந்தியின் அகிம்சை கண்ட சுதந்திரம்

காற்றையும் காசுக்கு விற்பதற்கா?

கண்ணீரும் செந்நீரும் தந்திட்ட சுதந்திரம்

தண்ணீரே இல்லாமல் தவிப்பதற்கா?


எளியோரின் போர்க்குரல் வென்றெடுத்த சுதந்திரம்

ஏழைகள் ஏற்றமின்றி வாடுவதற்கா?

சாதிமத பேதமின்றி சாதித்த சுதந்திரம்

சண்டைகள் செய்து சாவதற்கா?


தியாகிகளின் தீரத்தால் கிடைத்த சுதந்திரம்

தீண்டாமையின் சுவர்களுக்குள் சிக்குவதற்கா?

இந்தியா இணைந்து வென்ற சுதந்திரம்

இருட்டில் இருந்து வருந்துவதற்கா?


சுதந்திரம் சிலருக்கு மந்திரமானது -

அதனால் மகிமைகள் நடக்குது.

சுதந்திரம் சிலருக்கு தந்திரமானது -

அதனால் மர்மங்கள் நிலவுது.


சுதந்திரம் மனித தந்திரம் ஆகாமலிருக்கட்டும்!

சுதந்திரம் புனித மந்திரம் ஆகிடட்டும்!


இந்திய சுதந்திர திருநாள் வாழ்த்துகள்!!!