Tuesday, 14 July 2020

கதையை வாசிங்க… கருத்தை யோசிங்க… (1)



கால் ஊனமுற்ற நாய்குட்டியும் கால் ஊனமுற்ற சிறுவனும்






ஒரு சிறுவன் கடை வீதியில் போய்க்கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கண்களில் நாய்க்குட்டிகள் விற்கப்படுகிற ஒரு கடை தெரிந்தது. வெளியில் நின்று வேடிக்கை பார்த்த அந்த சிறுவன் சற்று தயக்கத்தோடு உள்ளே நுழைந்தான்

கடையின் உரிமையாளரிடம் அவன் நாய்க்குட்டிகளின் விலையைப் பற்றிக் கேட்டான். அவரும் விலையைப் பற்றிக் கூறினார். தன் சட்டைப் பையிலிருந்த பணத்தை எடுத்துப் பார்த்தான். குறைவாகத்தான் இருந்தது

நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?’ என்றான் அந்த சிறுவன். அவரும் நாய்க்குட்டிகள் வைக்கப்பட்டிருந்த அந்த பெட்டியினுடைய கதைவை அவனுக்குத் திறந்து காட்டினார். எல்லா குட்டிகளும் முட்டி மோதியபடி திறக்கப்பட்ட கதவின் வலைக்கு அருகே வேகமாக வந்து எட்டிப் பார்த்தன. ஒவ்வொன்றினைப் பற்றியும், அவற்றினுடைய விலையைப் பற்றியும் கடையின் உரிமையாளர் அவனுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்

ஆனால் அவனுடைய கவனம் முழுவதும் சற்று தூரத்தில் தனியாக தத்தி தத்தி நடந்து கொண்டிருந்த ஒரு நாய்க்குட்டியின் மீது இருந்தது. அதைப் பார்த்துவிட்ட அந்த உரிமையாளர் அந்த சிறுவனைப் பார்த்து, ‘தம்பி, அது சற்று கால் ஊனமுற்ற நாய். பிறக்கும்போதே அதற்கு அப்படி ஆகிவிட்டது. அதை ஒன்றும் செய்ய முடியாதென்று மருத்துவர்களும் சொல்லிவிட்டார்கள். அதை சும்மாதான் இங்கு விட்டு வைத்திருக்கிறேன்என்றார்

எனக்கு அந்த குட்டிதான் வேண்டும்என்றான் சிறுவன். ‘தம்பி அது மற்றவற்றைப் போல ஓடாது, விளையாடாது. அதனால் நீ விரும்பியபடி செல்லப் பிராணியாக இருக்க முடியாது. அதோடு அதை நான் விற்பனைக்காக வைக்கவும் இல்லைஎன்று சொன்னார் உரிமையாளர்

தன்னுடைய கால்சட்டையை சற்று உயர்த்தி தன்னுடைய போலியோ தாக்கப்பட்ட காலை அவருக்கு காட்டிய அந்த சிறுவன், ‘ஐயா, என்னுடைய கால்களும் நீங்கள் சொன்ன அந்த நாயைப் போலத்தான். என்னாலும் ஓட முடியாது. ஊனத்தின் வலியையும் அதனால் ஏற்பட்ட நிராகரிப்பையும் என்னுடைய வாழ்வில் நான் அனுபவத்திருக்கிறேன். அது எவருக்கும் ஏற்படக்கூடாது என்பதுதான் என் எண்ணம். மற்ற நாய்குட்டிகளை வாங்குவதற்கு பலர் இருக்கிறார்கள். ஆனால் இந்த ஊனமுற்ற நாய்குட்டியை யாரும் விரும்பப்போவதில்லை, வாங்கப்போவதுமில்லை. எனவே எவராலும் புரிந்துகொள்ளப்படாத இந்த ஊனமுற்ற நாயின் நிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே அதனை நானே வாங்கிக் கொள்ள விரும்புகிறேன்என்று மூச்சுவிடாமல் சொல்லிமுடித்தான்

அதைக் கேட்ட அக்கடையின் உரிமையாளர்  ஆச்சரியப்பட்டு, ‘சரி தம்பி உனக்கு இந்த நாயை நான் விலையில்லாமலே கொடுத்துவிடுகின்றேன். நீ மகிழ்ச்சியோடு எடுத்துப்போஎன்றார்

ஆனால் அச்சிறுவனோமன்னிக்கவும் ஐயா, எனக்கு விலையில்லாமல் எடுத்துப்போவதில் உடன்பாடு இல்லை. என்னிடம் இருக்கும் பணத்தை இப்போது கொடுத்துவிட்டுப்போகின்றேன். மீதியை விரைவாகக் கொடுத்துவிடுகின்றேன். ஏனென்றால் இந்த நாய்க்குட்டியும் ஏனைய நாய்க்குட்டிகளைப் போல விலை மதிப்புடையதுதான். எந்த வகையிலும் தாழ்வானதில்லை எனப் புரிந்துகொள்ளுங்கள்என்று சொன்னான்

பின்னர் மகிழ்ச்சியோடு தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த ஊனமுற்ற நாயினை விலை கொடுத்து வாங்கிச் சென்றான் அந்த ஊனமுற்ற சிறுவன்