காணாமல் போன உப்பு பொம்மை
அந்தி சாயும் நேரம்.
அழகான கடற்கரை.
காற்று வாங்கப் போனது ஓர் உப்பு பொம்மை.
கரையில் நின்று கடலின் அழகை ரசித்தது:
வாய் பிளந்து பார்த்த உப்பு பொம்மையிடம்
வாய் திறந்து பேசியது கடல்:
“என்ன வேண்டும் உனக்கு?
ஏன் என்னை இப்படிப் பார்க்கிறாய்?”
பதில் பேசியது உப்பு பொம்மை:
“எவ்வளவு பெரிய கடல் நீ.
எத்தனை எத்தனை அலைகள்.
பொங்கிப் புரளும் நுரைகள்.
பார்க்க பார்க்க பிரமிப்பு.
உண்மையில் நீ பெரிய ஆளுதான்”
சத்தமாய் சிரித்தது கடல்.
அழுத்தமாய் சொன்னது இப்படி:
“நீ சொல்லும் அலைகளும் நுரைகளும்
அவை மட்டும் நானில்லை.
நான் அதையும் கடந்தவன்.
தள்ளி நின்று பார்த்தால்
எதுவும் முழுமையாய் புரிவதில்லை.
உள்ளே இறங்கிப் பார்.
உண்மையில் நான் யார் என்பது
உள்ளபடியே உனக்குப் புரியும்.”
கடலின் பேச்சு சரியெனப்படவே
கடலுக்குள் கால் வைத்தது உப்பு பொம்மை.
கண்ணிமைக்கும் நேரத்தில் காணாமல் போனது.
கடலில் கரைந்து போனதை நினைத்து
கத்திக் கதறியது உப்பு பொம்மை.
கடல் கம்பீரமாய்ச் சொல்லியது:
“கலங்காதே… கதறாதே…
என்னில் நீ உன்னைக் கரைத்தாய்.
என்னோடு நீ ஒன்றாய்க் கலந்தாய்.
இனி உன்னை என்னில் காண்பாய்.
என்னைப் பற்றி உனக்கு இனி எல்லாம் புரியும்.”