அபு பென் ஆடம்
அபு பென் ஆடம் ஓர் இரவு தனது ஆழ்ந்த உறக்கத்தில் வந்த கனவிலிருந்து எழுந்திருக்கிறார். அப்போது தனது அறையில் விழுந்து கொண்டிருந்த நிலவொளியில், வானதூதர் ஒருவர் ஒரு தங்கப் புத்தகத்தில் ஏதோ எழுதுவதைக் காண்கிறார்.
அபு பென் ஆடம் வானதூதரிடம், ‘நீர் என்ன எழுதுகிறீர்?’ என்று கேட்கிறார். வானதூதர் தனது தலையை உயர்த்தி, இனிமையான, அழகான மற்றும் மகிழ்ச்சியான குரலுடன் ‘கடவுளை நேசிப்பவர்களின் பெயர்கள்’ என்று பதிலளிக்கிறார்.
வானதூதரின் பதில் அபு பென் ஆடமை உற்சாகப்படுத்துகிறது. மேலும் அவர் வானதூதரிடம் ‘எனது பெயரும் பட்டியலில் உள்ளதா?’ என்று கேட்க வானதூதர் ‘இல்லை’ என்று பதிலளிக்கிறார். இது அவரை மிகவும் சோகப்படுத்துகிறது. இருப்பினும், அதே உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும், ‘மனிதர்களை நேசிப்பவர்களிடையே எனது பெயரை எழுதுங்கள்’ என்று வானதூதரை அபு பென் ஆடம் கேட்டுக்கொள்கிறார்.
அடுத்த இரவு வானதூதர் மீண்டும் வருகிறார். இந்த நேரத்தில் மங்கலான நிலவொளிக்கு பதிலாக, அவர் ஒரு பிரகாசமான ஒளியுடன் தோன்றுகிறார். வானதூதர் இப்போது மற்றொரு தங்க புத்தகத்துடன் வருகிறார். இது என்னவென்று அபு பென் ஆடம் கேட்டபொழுது இது ‘கடவுள் நேசிக்கும் மனிதர்களின் பெயர்கள்’ என்று வானதூதர் பதில் தந்தார். மேலும் இதில் அபு பென் ஆடமின் பெயர் முதல் இடத்தில் இருக்கிறது என்றும் சொன்னார்.
இவ்வாறு ‘மற்றவர்களை (மனிதர்களை) நேசிப்பவர்கள் கடவுளால் மிகவும் நேசிக்கப்படுவார்கள்’ என்பது ஆங்கிலக் கவிஞர் ஜேம்ஸ் ஹென்றி லே ஹன்ட் எழுதிய இக்கவிதையில் தெளிவாகிறது.